நெல்லை தொகுதியைக் குறிவைத்து இலைக்கட்சியில் மா.செ. தச்சை கணேசராஜா, அமைப்புச் செயலாளர் சுதா.பரமசிவன், அவைத்தலைவர் சங்கரலிங்கம், எக்ஸ் மேயர் புவனேஸ்வரி, எக்ஸ் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் என 32 பேருக்கும் மேலானவர்கள் கச்சை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் தொகுதி இரட்டை இலைக்குத்தான் என்று அவர்கள் அபரிமிதமான நம்பிக் கையிலிருக்க, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி நெல்லை பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் என்கிற பா.ஜ.க.வின் உத்தேசப் பட்டியல் நெல்லை ர.ர.க்களை உறையவைத்துவிட்டது.

Advertisment

kk

தேர்தல் மேகங்கள் படரத் தொடங்கிய உடனேயே பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியைப் பெற மேல்மட்டத் தலைவர்களின் டச்சிலிருந்திருக்கிறார். மாநிலத் தலைவர் முருகன், மற்றும் களச்சூழலைக் கவரவைப்பதற்காக குஷ்பு போன்றவர்களை வரவழைத்து தொகுதி ஒதுக்கப்படுவதற்கு முன்பாகவே பிரச்சாரத்தைத் தொடங்கியது என நயினார் நாகேந்திரனின் ஏற்பாட்டில் ஜெகஜ்ஜாலங்கள் நடந்திருக்கின்றன.

அவர்கள் சந்தேகப்பட்டதற்கு ஏற்ப நெல்லை பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளர் நயினார் நாகேந்திரன் என்ற அறிவிப்பு வெளியானது ர.ர.க்களை உறும வைத்துவிட்டது. அதேசமயம் தொகுதிக்கான நேர்காணலை அ.தி.மு.க.வின் கட்சித் தலைமை நடத்திக்கொண்டிருந்தபோது அ.தி.மு.க.வின் உயர்மட்ட அமைப்புச் செ.வான படைக்கும் கடவுளின் பெயர்கொண்ட கட்சியின் நெல்லை சீனியர் புள்ளி, தொகுதி பறிபோனது கண்டு கட்சித் தலைமைப் பொறுப்பாளர்களிடம் பொங்கித் தீர்த்துவிட்டாராம்.

""எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே நெல்லை அ.தி.மு.க.விற்குத்தான் ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்குக்கூட தலைவரும் அம்மாவும் ஒதுக்கியதில்லை. 10 தொகுதிகளை உள்ளடக்கியுள்ள நெல்லைதான் தென்மாவட்ட அ.தி.மு.க.வின் அடையாளம். அப்படியிருக்க நெல்லை, பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து கட்சிக்காரர்கள் கொதிப்பிலிருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க. போய், அங்கே உரிய பதவி கிடைக்காத போது தி.மு.க.வுக்குத் தாவுவேன் என பயமுறுத்தியவர். வளர்த்து ஆளாக்கிய அ.தி.மு.க.விற்கு ரெண்டகம் செய்தவர். தொகுதியை நயினார் நாகேந்திரனுக்குத் கொடுத் தால், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சிக்கும் தாவலாம்ற மனநிலை தொண்டர்களுக்கு வந்துவிடும் அதனால், நம் கட்சியைச் சார்ந்த யாருக்கு வேண்டு மானாலும் கொடுங்க'' என்று கட்சித் தலைமையிடம் கொதிப் பை வெளிப்படுத்திவிட்டாராம்.

நெல்லை தவிர மாவட்டத்தின் பிற தொகுதியை அவர் களுக்கு ஒதுக்குங்கள் என்று அ.தி.மு.க.வின் தலைமையிடம் அல்வா நகரப் புள்ளிகள் நடத் தும் போராட்டம் கடைசிக் கட் டம் வரை தொடர்ந்தது. இந்தக் கொதிப்பையறிந்த நயினார் நாகேந்திரனும், நாங்குநேரி சரிப் பட்டுவருமா என்று தன் ஆதர வாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.